Type to search

சி.பி.ஐ-க்கு வழக்கு மாற்றம் – என்ன செய்யப் போகிறார் பொன்.மாணிக்கவேல்?

India Top Story Tamil nadu

சி.பி.ஐ-க்கு வழக்கு மாற்றம் – என்ன செய்யப் போகிறார் பொன்.மாணிக்கவேல்?

Share

சிலைக் கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றி அரசாணை பிறப்பித்துள்ளது தமிழக அரசு.india tamilnews statue smuggling case CBI transfer – manikkavel next move?

india tamilnews statue smuggling case CBI transfer - manikkavel next move?

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், பொன்.மாணிக்கவேல் இனி என்ன செய்யப்போகிறார் என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது.

தேசிய குற்ற ஆவணக்காப்பக புள்ளிவிவரப்படி, இந்தியாவில் சுமார் 70 லட்சம் சிலைகள் உள்ளன. இதில் சுமார் 13 லட்சம் சிலைகளுக்கு மட்டுமே முறையான ஆவணப் பதிவு உள்ளது.

தமிழகத்தில் உள்ள 36,500 கோயில்களில் கிட்டத்தட்ட 4.3 லட்சத்துக்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன. இதில் கணக்கில்வராத சிலைகள் ஏராளம்.

தமிழகத்தில் ஒருகாலகட்டத்தில் தொடர்ச்சியாக சிலைகள் கடத்தப்பட்டதையடுத்து, 1983-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு.

இந்த வழக்குகளை விசாரிப்பதற்கென்றே தமிழகத்தில் இரண்டு சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன.

அதன்பிறகு சிலைக்கடத்தல் குறித்த பல வழக்குகள் விசாரணைக்கு வந்தன. இந்தப் பிரிவின் முயற்சியால், புகழ்பெற்ற பத்தூர் நடராஜர் சிலை முதல் சிவபுரம் நடராஜர் சிலை வரை, இன்டர்போல் உதவியோடு வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டன.

சர்வதேச சிலைக் கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் கைது செய்யப்பட்டதும் இந்தப் பிரிவின் முயற்சியால்தான்.

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் 2012-ம் ஆண்டிலிருந்து பணியிலிருக்கிறார் பொன்.மாணிக்கவேல். இடையில், ரயில்வே ஐ.ஜியாக மாற்றினார்கள்.

ஆனாலும், நீதிமன்றத் தலையீடு காரணமாக, 2017 ஜூலை முதல் கூடுதல் பொறுப்பாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவையும் கவனித்து வருகிறார்.

கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் இருபது சிலைகளை மீட்டிருக்கிறது பொன்.மாணிக்கவேல் தலைமையிலான பிரிவு. இதன் இன்றைய சந்தை மதிப்பு 250 கோடி ரூபாய்.

தற்போது பரபரப்பாகப் பேசப்படுவது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் சிலை தொடர்பான வழக்கு. 2015-ல், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலின் உற்சவர் சிலையான ‘சோமாஸ் கந்தர்’ சிலை பழுதடைந்ததால், புதிய சிலை செய்ய உத்தரவு பெறப்பட்டது.

50 கிலோ எடையில், ரூ.2.12 கோடி செலவில் புதிய உற்சவர் சிலை செய்யப்பட்டு, 2016-ம் ஆண்டு டிசம்பரில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

இதில், 5 சதவிகித தங்கம்கூட கலக்கப்படவில்லை. மொத்தத்தையும் சுருட்டிவிட்டனர் என்றபடி அண்ணாமலை என்பவர், காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றப் படியேறியதுதான் இதற்கு அடிப்படை.

தமிழக அறநிலையத்துறை தலைமை ஸ்தபதி முத்தையா உள்ளிட்ட ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனால், சிலர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றனர். இதையடுத்து, பழநியில் முருகனுக்கு ஐம்பொன் செய்யப்பட்டதிலும் தங்கம் மோசடி நடந்திருக்கும் விஷயத்தைக் கையில் எடுத்த பொன்.மாணிக்கவேல், ஓய்வுபெற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால், ஸ்தபதி முத்தையா, கோயில் முன்னாள் இணை ஆணையர் கே.கே.ராஜா, முன்னாள் உதவி ஆணையர் புகழேந்தி, தங்க நகை மதிப்பீட்டாளர் தேவேந்திரன் உள்ளிட்டோரை கைது செய்தார்.

இதில் ஸ்தபதி முத்தையா, முன்னாள் கமிஷனர் தனபால் உள்ளிட்ட சிலர் ஜாமீனில் வெளியே இருக்கிறார்கள்.

ஆனால், கிட்டத்தட்ட போலீஸ் காவலுடன் ஹவுஸ் அரெஸ்ட் என்கிற நிலையில்தான் உள்ளனர்.
அடுத்த கட்டமாக திருத்தணி கோயிலிலும் தங்க மோசடி என்று பகீர் கிளம்பவே, அதையும் துருவ ஆரம்பித்தார் பொன்.மாணிக்கவேல்.

உடனே, பழநி சிலை முறைகேடு தொடர்பான விவகாரத்தை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார் தமிழக டி.ஜி.பி-யான ராஜேந்திரன்.

சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸார் சரியான கோணத்தில் விசாரித்து வருகிறார்கள். ஆனால், யார் யாரையோ தப்பிக்க வைப்பதற்காக சில சக்திகள் வெளிப்படையாகவே வேலை செய்கின்றனர் என்கிற குற்றச்சாட்டு எழுந்தது.

பொன்.மாணிக்கவேல் தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இதுதொடர்பாக டிஜிபிக்கும் பொன்.மாணிக்கவேலுக்கும் இடையே கடித வாயிலாகக்கூட மோதல் நடந்ததாகக் கூறப்படுகிறது.

நீதிமன்றத் தலையீட்டின் பேரில், பொன்.மாணிக்கவேல் தொடர்ந்து பழநி கோயில் வழக்கையும் விசாரித்துவருகிறார்.

இந்நிலையில், அறநிலையத்துறை திருப்பணிகள் பிரிவு கூடுதல் ஆணையர் கவிதா, ஆகஸ்ட் 31-ம் தேதியன்று கைது செய்யப்பட்ட நிலையில், அதிரடியாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவிடமிருந்து ஒட்டுமொத்த வழக்குகளையும் சி.பி.ஐ. வசம் மாற்றி அரசாணையை வெளியிட்டுவிட்டது தமிழக அரசு.

இதுதொடர்பாக பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், “சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவில் ஒரு வழக்கு பதிவாகிறது.

அதை விசாரிக்கும் பொறுப்பு ஓர் அதிகாரியிடம் ஒப்படைக்கப்படுகிறது. அப்படியிருக்க, குற்றம்சாட்டப்பட்டவர்களை, வழக்குக்கு சம்பந்தமில்லாதவர்கள் எல்லாம் வந்து, ஐ.ஜி முன்னிலையில் விசாரிக்கிறார்கள்.

இதையெல்லாம் ஒரு விசாரணை அதிகாரி எப்படி அனுமதிக்க முடியும்? ஏதாவது ஏடாகூடமாக நடந்துவிட்டால் யார் பதில் சொல்வது? இப்படி விசாரிக்க அனுமதிக்க மறுத்த காரணத்தால், ஒரு டி.எஸ்.பி மிரட்டப்பட்டுள்ளார்.

பின்னர் அவர், கோவை மின்திருட்டுப் பிரிவுக்கு உயர் அதிகாரிகளால் மாற்றப்பட்டார். இது ஓர் உதாரணம்தான்.

இப்படி பல அதிகாரிகளைத் தன் இஷ்டத்துக்கு வளைந்து கொடுக்கச்சொல்லி, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார் பொன்.மாணிக்கவேல். இப்படி பல பிரச்னைகள் இருக்கின்றன.

ஆனால், நீதிமன்ற உத்தரவின்பேரில் பொன்.மாணிக்கவேல் செயல்படுவதால், உயர் அதிகாரிகளே மிரண்டு கிடக்கிறார்கள்” என்றார்.

பொன்.மாணிக்கவேல் கடந்த ஓராண்டில் மீட்ட சிலைகளில் விபரம் :

2017 செப்டம்பர் மாதம் திருவண்ணாமலையில் ரூ.10 கோடி மதிப்புள்ள 6 சிலைகள் மீட்கப்பட்டன. அருப்புக்கோட்டையில் ரூ.25 கோடி மதிப்புள்ள 3 சிலைகளை திருடிய டி.எஸ்.பி காதர்பாஷா மற்றும் உதவி ஆய்வாளர் சுப்புராஜ் ஆகியோரை கைது செய்திருக்கிறார்.

அக்டோபர் மாதம் காஞ்சிபுரம், பாலுசெட்டி சத்திரத்திலிருந்து கடத்தப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள சிலை மீட்கப்பட்டது. அதே ஆண்டு நவம்பர் மாதத்தில் தஞ்சாவூர், பந்தநல்லூர் பசுபதீசுவரர் கோயிலிலிருந்து கடத்தப்பட்ட மாணிக்கவாசகர் சிலை மீட்கப்பட்டது.

india tamilnews statue smuggling case CBI transfer - manikkavel next move?

ஈரோட்டில் ரூ.5 கோடி மதிப்புள்ள பச்சைக்கல் சிவலிங்க சிலை மீட்கப்பட்டது. டிசம்பர் மாதத்தில் திருவாடனையில் ரூ.3 கோடி மதிப்புள்ள விநாயகர் சிலையை மீட்டனர்.

2018 ஜனவரியில் திருநெல்வேலி, வீரவநல்லூர் கோயிலிலிருந்து ரூ.10 கோடி மதிப்புள்ள 2 துவார பாலகர்கள் கற்சிலைகளைக் கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூரிலிருந்து கடத்திச் சென்று விற்கப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்புள்ள விநாயகர் சிலை மீட்கப்பட்டது.

பிப்ரவரி மாதத்தில் சங்கரன்கோயிலில் 1400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வெள்ளிப் பல்லக்கைத் திருடி விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மார்ச் மாதம் பழநி முருகன் கோயிலில் ஐம்பொன் முருகர் சிலை செய்ததில் ரூ.1.31 கோடி மோசடி செய்தவர்களைக் கண்டறிந்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

கடந்த மே மாதம் வேலூர், பேரணாம்பட்டிலிருந்து கடத்தி விற்கப்பட்ட ரூ.25 லட்ச மதிப்புள்ள 3 சிலைகள் மீட்கப்பட்டன.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக தஞ்சை பெரிய கோயிலிலிருந்து கடத்தி விற்கப்பட்ட ரூ.150 கோடி மதிப்புள்ள ராஜராஜ சோழன் மற்றும் அவரது மனைவி லோகமாதா சிலைகள் குஜராத்திலிருந்து மீட்டுக் கொண்டுவந்திருக்கிறது பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு.

ஆனால், இவர்களது செயல்பாடு திருப்தியில்லை என்று சிலைக் கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றியிருக்கிறது தமிழக அரசு.

இந்நிலையில், சிலைக் கடத்தல் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, “சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிறப்புக் குழுவை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது.

இந்நிலையில், வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்ற முடியுமா. சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் தனிப்பிரிவின் நிலை என்னவாகும்” என்று தமிழக அரசுத் தரப்பு தலைமை வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

“கும்பகோணம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை மட்டும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு நடத்தும் எனவும் மற்ற வழக்குகளை சி.பி.ஐ விசாரிக்கும்” என்று அரசுத்தரப்பு விளக்கமளித்தது.

அறநிலையத்துறையில் சிலரைக் காப்பாற்றவே சி.பி.ஐக்கு வழக்குகளை மாற்றியிருப்பதாகவே சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கருதுகின்றனர்.

“கும்பகோணம் நீதிமன்றத்தில் 2018-ம் ஆண்டு வரை பல முக்கிய வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அந்த வழக்குகளை விசாரித்தாலும் அறநிலையத்துறையில் பலர் சிக்குவார்கள். தற்போது சிலைக் கடத்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு வரும் 8-ம் தேதி நீதிமன்றம் பதில் சொல்லும்” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரி ஒருவர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags:

You Might also Like