Type to search

ஜெயலலிதா! கருணாநிதிக்கு பிறகு தமிழகத்தில் ரஜினிகாந்த்! – அமித் ஷா!

INDIA India Top Story

ஜெயலலிதா! கருணாநிதிக்கு பிறகு தமிழகத்தில் ரஜினிகாந்த்! – அமித் ஷா!

Share

அ.தி.மு.க ஆட்சிக்கு எதிராக பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா எடுத்துவரும் முயற்சிகள் எடப்பாடி பழனிசாமி தரப்புக்குக் கூடுதல் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.Jayalalitha Rajinikanth Tamil Nadu Karunanidhi – Amit Shah

‘ரஜினிகாந்த் தரப்பில் இருந்து பாசிட்டிவ்வான பதில்கள் வந்திருப்பதில் உற்சாகத்தில் இருக்கிறார் அமித் ஷா. எடப்பாடி பழனிசாமியின் மௌனத்தால் அதிர்ச்சியில் இருக்கிறார்கள் அமைச்சர்கள்’ என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்பட்டு வரும் சத்துணவு திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி, நாமக்கல் ஆண்டிபாளையத்தில் இயங்கி வந்த கிறிஸ்டி ஃபிரைடு கிராம் நிறுவனத்தை வளைத்தது வருமான வரித்துறை.

ஐந்து நாள்கள் நீடித்த இந்த ரெய்டில் கணக்கு வழக்குகள் தொடர்பாக ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதன் அடுத்தகட்டமாக, பண மதிப்பு நீக்க நடவடிக்கையின்போது தனிநபர் கணக்கில் 246 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கும் தகவல்களும் வெளியானது.

மேலும், 1,350 கோடி ரூபாய் வரி ஏய்ப்பில் கிறிஸ்டி நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. ‘எடப்பாடி பழனிசாமியை குறிவைத்துத்தான் இந்த ரெய்டு நடத்தப்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்க விரும்புகிறார் அமித் ஷா. இந்த முயற்சிக்கு எடப்பாடி தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. எனவே, ‘இது ஓர் ஊழல் ஆட்சி’ என பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் ரெய்டு நடவடிக்கை அரங்கேற்றப்பட்டது.

Jayalalitha Rajinikanth Tamil Nadu Karunanidhi - Amit Shah

ரெய்டு நடவடிக்கைகள் நடந்துகொண்டிருந்த அதேநேரத்தில், கிழக்குக் கடற்கரைச் சாலையில் பா.ஜ.க-வின் பத்தாயிரம் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் இருந்தார் அமித் ஷா.

இதன்பின்னர், திறந்தவெளி கூட்டத்தில் பேசிய அமித் ஷா, ‘பா.ஜ.க எங்கெல்லாம் ஆட்சியில் இருக்கிறதோ அங்கெல்லாம் ஊழலுக்கு முடிவு கட்டிக்கொண்டு இருக்கிறோம். தமிழ்நாட்டைப் பற்றி நினைக்கும்போது, என் இதயத்தில் வருத்தம் ஏற்படுகிறது. நாட்டிலேயே அதிகமாக ஊழல் நடைபெறும் மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது.

தமிழகத்திலும் ஊழல் இல்லாத ஆட்சியைக் கொண்டு வருவதற்கு நாம் உறுதிகொள்ள வேண்டும். அதற்கான பொறுப்பு நமக்கிருக்கிறது. அந்த உறுதியை நாம் ஏற்க வேண்டும்’ என்றார். மத்தியில் ஆளும் ஒரு கட்சியின் தேசியத் தலைவர் இவ்வாறு பேசியது, ஆளும்கட்சி தரப்பை மிரள வைத்தது.

இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசினார் பா.ஜ.க-வின் முக்கிய நிர்வாகி ஒருவர், “ திராவிடக் கட்சிகளின் ஊழல்களை வெளிக் கொண்டு வரும் நோக்கில்தான் அமித் ஷா இவ்வாறு பேசினார்.

அவரது பார்வை முழுக்க ரஜினியை மையம் கொண்டிருக்கிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தால் மிகுந்த கொதிப்பில் இருந்தார் அமித் ஷா. ‘சட்டம் ஒழுங்கை எப்படிக் காப்பாற்ற வேண்டும் என எடப்பாடிக்குத் தெரியவில்லை.

ஜெயலலிதா பாணியில் அமைதியை நிலைநிறுத்தியிருக்க வேண்டும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என ஆவேசப்பட்டார். இதன் தொடர்ச்சியாகத்தான், எடப்பாடி பழனிசாமியை குறிவைத்து சில வேலைகள் நடந்தன.

நாமக்கல் ரெய்டின் மூலம் எடப்பாடி பழனிசாமிக்குச் செக் வைக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. அதேநேரம், கிறிஸ்டி நிறுவனத்தின் மூலம் தி.மு.க குடும்ப உறுப்பினர்கள் அடைந்த ஆதாயத்தை வெளியிடும் வேலைகளும் தொடங்க இருக்கின்றன.

ஏனென்றால், 96-2001 தி.மு.க ஆட்சிகாலத்தில்தான் சத்துணவு திட்டத்துக்குள் நுழைந்தது கிறிஸ்டி நிறுவனம். இந்த நிறுவனத்தின் தரப்பில் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் சில அதிரடிகள் நடக்க இருக்கின்றன” என விவரித்தவர்.

“சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்று வருகிறார் சசிகலா. அமலாக்கத்துறையின் ஃபெரா வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார் தினகரன். சசிகலாவுக்கு வேண்டிய 140 குடும்ப உறுப்பினர்கள் மீதும் வருமான வரித்துறை சோதனை நடந்தது.

இந்தக் குடும்பத்தின் ஊழல்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்றது பா.ஜ.க. அடுத்ததாக, அ.தி.மு.க, தி.மு.கவைக் குறிவைத்து கிறிஸ்டிக்குள் நுழைந்தது ஐ.டி. ‘ மத்திய அரசுக்கு இணக்கமாகச் செயல்படுகிறோம்.

பிறகு ஏன் ஐ.டி ரெய்டு?’ என அ.தி.மு.க புள்ளிகள் டெல்லி வட்டாரத்தில் விசாரித்துள்ளனர். அதற்குக் கிடைத்த ஒற்றைப் பதில், ‘ நாங்கள் ரஜினியை நோக்கிச் செல்கிறோம்’ என்பதுதான்.

அமித் ஷாவின் சென்னை வருகையில் பத்தாயிரம் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அடுத்து மோடியின் சென்னை வருகையின்போது ஒன்றரை லட்சம் பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள்.

ரஜினியுடன் பா.ஜ.க கூட்டணி சேருவதில் பல நன்மைகள் ஏற்படப் போகின்றன. இதன்மூலம் பா.ஜ.க-வின் உறுப்பினர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். ரஜினி தரப்பில் இருந்து சரியான பதில் கிடைத்ததால்தான், உற்சாகத்தில் இருக்கிறார் அமித் ஷா.

ரஜினியின் அரசியல் என்ட்ரியால் திராவிடக் கட்சிகளிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. ‘ரஜினியோடு சேர்ந்தால் வெற்றி பெற்றுவிடுவோம்; ஜெயலலிதா, கருணாநிதிக்கு அடுத்து ரஜினிதான்’ என்பதில் உறுதியாக இருக்கிறது பா.ஜ.க தலைமை” என்றார் விரிவாக.

“பா.ஜ.க-வுடன் கூட்டணி குறித்து அ.தி.மு.கவின் முக்கியத் தலைவர்கள் கிரீன் சிக்னல் கொடுத்தாலும், எடப்பாடி பழனிசாமியின் கருத்து வேறாக இருக்கிறது. ‘ நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணிகளை இப்போதே இறுதி செய்ய வேண்டிய அவசியமில்லை.

தேர்தல் நெருக்கத்தில் முடிவு செய்வோம். அதுவரையில் எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயார்’ எனக் கூறியிருந்தார். ‘கூட்டணி வேண்டாம்’ என அவர் உறுதியாகச் சொல்லவில்லை. ‘ ரஜினி ப்ளஸ் 27 சதவிகித வாக்குகளை வைத்துள்ள அ.தி.மு.க-வுடன் இணைந்து தேர்தலை சந்தித்தால் பிரமாண்ட வெற்றியைப் பெறுவோம்’ என பா.ஜ.க நிர்வாகிகள் நம்புகின்றனர்.

ஆனால், அமித் ஷாவோ, ரஜினியை மட்டுமே பிரதான சக்தியாக நம்புகிறார். அடுத்து வரும் நாள்களில் பன்னீர்செல்வத்தின் கரங்கள் வலுப்படுமா..கிறிஸ்டி ரெய்டின் நீட்சி என்ன… எடப்பாடி பழனிசாமியின் அதிகாரம் என்னவாகும் என்ற கேள்விக்கான விடைகளை எல்லாம் அமித் ஷா மட்டுமே அறிவார்” என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags: