Type to search

தேசத் துரோகிகள் ஆட்சியில்! தேசப் பற்றாளர்கள் சிறையில்! – இரா.முத்தரசன் குற்றச்சாட்டு!

India Head Line Tamil nadu

தேசத் துரோகிகள் ஆட்சியில்! தேசப் பற்றாளர்கள் சிறையில்! – இரா.முத்தரசன் குற்றச்சாட்டு!

Share

கோவையில் தியாகி முத்து நினைவு தின பொதுக்கூட்டத்தில் சிபிஐ மாநில செயலாளர் இரா.முத்தரசன் பேசியபோது : ஆட்சியின் தவறை சுட்டிக்காட்டி போராடினால் தேசத் துரோகம் என்றால் அதனைத் தொடர்ந்து செய்வோம். தேசத் துரோகிகள் ஆட்சியில் தேசத்தை பாதுகாக்க போராடுபவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர் என குற்றம்சாட்டினார்.rule treason nationals prison raja murugan’s accusation

பஞ்சாலை தொழிலாளர்களின் உரிமைக்காகவும், மனித குல விடுதலைக்கான மார்க்சியத்தை முன்னெடுத்த போராளி முத்து பஞ்சாலை முதலாளிகளின் தூண்டுதலால் படுகொலை செய்யப்பட்டார். உப்பிலியபாளையம் தியாகி முத்துவின் 65 ஆவது ஆண்டு நினைவு தினம் சனியன்று உப்பிலியபாளையத்தில் அனுசரிக்கப்பட்டது.

சிபிஎம், சிபிஐ கட்சிகள் இணைந்து நடத்திய நினைவேந்தல் பொதுக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் சிங்கை நகரக்குழு உறுப்பினர் ஏ.தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் எம்.தங்கவேல் வரவேற்புரையாற்றினார். மாவட்ட பொருளாளர் யு.கே.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இர.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் பங்கேற்று நினைவேந்தல் உரையாற்றினர்.

இதில் பங்கேற்று இரா.முத்தரசன் பேசுகையில், அனைவரும் அரசியலைப்புச் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள். ஆட்சியில் இருப்பவர்களும் அதே அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள்தான். ஆனால் பிரதமர் மோடி ஆட்சியும்,

தமிழகத்தில் எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சியும் அரசியல் அமைப்புச்சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள் போல் இல்லை. தங்கள் இஷ்டம்போல் ஆட்சியை நடத்துகிறார்கள். அதன்காரணமாகத்தான் அரசை விமர்சித்து பேசுபவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.

அரசியல் அமைப்புச் சட்டத்தை எழுதிய அம்பேத்கர்தான் சொல்வார் ஒரு அடிமையை இன்னொரு அடிமை விடுதலை செய்ய முடியாது என்று. அவன் அடிமையாய் இருப்பதை உணர்ந்தால் தவிர அப்படி உணர்வானே ஆனால் கையில் பூட்டியிருக்கும் விலங்கை உடைத்தெரிவான்.

ஆனால் இவன் தலைவிதி என நினைத்துக்கொண்டிருக்கிறான். இவனுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் அரசியல் கட்சிகளின் வேலை. அது கம்யூனிஸ்ட் கட்சிகளானாலும் எந்த அமைப்பானாலும் அதுதான் வேலை. நாடு அடிமைப்பட்டுக்கிடந்தபோது வெள்ளையை விரட்ட அப்படியான விழிப்புனர்வுதான் மக்களை ஒருங்கிணைத்து போராடவைத்தது வெள்ளையனை விரட்டியடித்தது. இதற்காக எத்தனை கட்டபொம்மன்கள், காந்திகள் தேவைப்பட்டார்கள். குடம்குடமாய் ரத்தம் சிந்தினார்கள் தியாகம் செய்தார்கள்.

மோடியோ, எடப்பாடியோ திட்டங்களை கொண்டு வருகிறார்கள். அத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை விமர்சிக்கிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது. இல்லை எங்கள் திட்டம் சரிஎன்று சொல்ல உங்களுக்கும் உரிமை உள்ளது. நாட்டில் எழுத, பேச, உண்ணாவிரதம் இருக்க, மறியல் செய்ய போராட அனைத்து உரிமைகளும் அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியிருக்கிறது. இதை தடுப்பதற்கு மோடிக்கும், எடப்பாடிக்கும் யார் உரிமையை தந்தது.

விவசாயிகளை சந்தித்து குறைகேட்டதற்காக மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பாலபாரதி கைது செய்யப்படுகிறார். கோவை நகர மக்களுக்கு குடிநீர் விநியோகிக்க சூயஸ் நிறுவனத்திடம் போட்ட ஒப்பந்த நகலை கேட்டால் கைது செய்யப்படுகிறார்.

மேலும், நாங்கள் எங்கு செல்கிறோம், என்ன பேசுகிறோம் என்பதை தீவிரமாக காவல்துறை கண்கானித்துவழக்கு போடுகிறது. இதற்கெல்லாம் அஞ்சுபவர்கள் அல்ல கம்யூனிஸ்டுகள், அதற்காகத்தான் நாங்கள் பிறந்திருக்கிறோம். எங்கள் ஒவ்வொருவர் மீதும் எண்ணற்ற வழக்குகள் உள்ளது. அதனை எதிர்கொள்கிறோம்.

ஆனால் இதில் அனைத்திலும் நாங்கள்தான் வெற்றி பெறுகிறோம். நீங்கள்தான் தொடர்ந்து தோற்றுப் போய்க்கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் எண்ணியதை பேசவும், சொல்லவும் அரசியல் அமைப்பு வழங்கிய உரிமையை பறிப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை.

மோடி மற்றும் எடப்பாடி ஆட்சியில் பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் மிரட்டப்படுகின்றனர். அரசை விமர்சித்தால் தேசதுரோகி என பட்டம் சூட்டப்படுகிறது.போராடினால் கைது செய்யப்படுகிறார்கள். யாரெல்லாம் தேச துரோகியோ அவர்கள் ஆட்சியில் உள்ளனர். யார் எல்லாம் நாட்டை காப்பாற்ற போராடுகிறார்களோ அவர்கள் சிறையில் உள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக, விவசாயிகளுக்கா, தொழிலாளர்களுக்காக போராடுவது தேசதுரோகம் என்றால் அத்தகைய தேசதுரோகத்தை தொடர்ந்து செய்து கொண்டிருப்போம். எங்களிடம் தியாகி முத்து போன்ற ஆயிரம் ஆயிரம் முத்துக்கள் களத்தில் உள்ளார்கள். காலம் சொல்லும் நாங்கள் வெல்வோம் என நிறைவு செய்தார்.

முன்னதாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் பேசுகையில், தியாகி முத்துவை போன்ற தோழர்களின் தியாகம் வெறும் கூலிக்கான போராட்டமாக சித்தரிக்கப்படுகிறது. இதனை முதலாளித்துவ பத்திரிக்கைகளும், கட்சிகளும் திட்டமிட்டு பரப்புகிறது.

ஆனால் இது கூலிக்கான போராட்டமல்ல ஒட்டுமொத்த மனித குலத்தின் விடுதலைக்காக எங்கள் தோழர்கள் அவர்களின் உயிரை தியாகம் செய்தனர்.

இன்று உலக கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. 125 கோடிமக்கள் தொகையுள்ள நமது நாட்டில் இருந்து ஒரு குழுவை நம்மால் அனுப்ப முடியவில்லை. ஒவ்வொரு முறையும்ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் போதும் நமது நாட்டிற்கு ஒரு தங்கம் கிடைத்துவிடுமா என்கிற ஏக்கம் வருகிறது.

ஆனால் சோவியத் யூனியன் என்கிற நாடு இருந்தபோது 11 போட்டிகள் நடைபெற்றதில் 9 போட்டிகளில் பங்கேற்றது. இதில் தனிநபர் போட்டியோ, குழுவான போட்டியோ பதக்க பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது. ஆனால் சோசலிசம் குறித்து தவறான மோசமான கருத்தை உருவாக்கம் செய்கிற வேலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதன் பின்னணியில் முதலாளித்துவத்தின் இருப்பை பாதுகாத்துக்கொள்வதற்காக இளைஞர்கள் மத்தியில்இத்தகைய வெறுப்பை விதைத்துவருகிறது.

ஆனால் சோசலிசம்தான் ஒவ்வொரு தனிமனிதனையும் சொத்தாக கொண்டாடும். அவர்கள் என்னவாக ஆக நினைக்கிறார்களோ அதற்கு அந்த ஒட்டு மொத்த சமூகமும் ஒத்துழைக்கும் அதுதான் சோசலிச சமூகம். அத்தகைய சமூகத்தை உருவாக்குவதற்குத்தான் முத்து போன்ற எண்ணற்ற தியாகிகள் தங்களின் வாழ்வை அர்ப்பணித்தார்கள். அத்தகைய உண்ணத சமூகத்தை உருவாக்க தொடர்ந்து போராடுவோம்.

சேலம் சென்னை எட்டு வழி சாலைவேண்டாமா, நல்ல குடிநீர் வேண்டாமா என்று மனித பலவீனத்தை முதலாளித்துவம் காசாக்குகிறது இதற்கு பின்னால் மிகப்பெரிய மோசடி இருக்கிறது. கருத்துக்களின் மீது முதலாளித்துவம் ஆதிக்கம் செலுத்துகிறது.

அத்தகைய மோசடியைத்தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி கையான்டார் வெற்றி பெற்றார். ஆனால் எதையெல்லாம் எதிர்பார்த்து மக்கள் ஆதரித்தார்களோ அது ஒன்றுகூட மோடியின் ஆட்சியில் நிறைவேறவில்லை. மாறாக கடந்த கால காங்கிரஸ் ஆட்சியைவிட கடுமையான நெருக்கடியையே ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய நிலையில்தான் கம்யூனிஸ்டுகள் போராடுகிறோம் மக்களுக்கு உண்மைகளை எடுத்து சொல்கிறோம். ஆனால் அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமையை ஆட்சியாளர்கள் பறிக்கிறார்கள்.

ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் வேண்டுமானால் மோடியிடம் அடிபணிந்து நிற்கட்டும் ஆனால் கம்யூனிஸ்டுகள் அப்படி ஒரு போதும் அடிபணிய முடியாது. இதுபோராளிகளின் இயக்கம் மக்களுக்கான உரிமையை மீட்பதற்கான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கும்.

எந்த சமூகத்தை உருவாக்க தோழர் முத்து போன்ற தியாகிகள் தங்கள் வாழ்வை அர்ப்பணித்தார்களோ அத்தகைய சமூகத்தை ஒன்றுபட்டு போராடி வெல்வோம் என நிறைவு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.மனோகரன், சிங்கை நகரச் செயலாளர் வி.தெய்வேந்திரன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.தேவராஜ், எஸ்.பாலச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

முன்னதாக தியாகி முத்துவின் நினைவிடத்தில் தலைவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி உறுதிமொழியேற்றனர். ஜனசக்தி கலைக்குழுவின் பறை இசை நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் சிபிஎம் கிளைசெயலாளர் என்.வாசுதேவன் நன்றி கூறினார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags: