Type to search

அதிகார வெறியில் அ.தி.மு.க ஆட்சி! – எதிர்த்துக் குரல் கொடுக்க திரள்கிறது! சி.பி.எம்..!

India Head Line Tamil nadu

அதிகார வெறியில் அ.தி.மு.க ஆட்சி! – எதிர்த்துக் குரல் கொடுக்க திரள்கிறது! சி.பி.எம்..!

Share

அதிமுக ஆட்சியின் அதிகார வெறித்தனத்தை எதிர்த்து குரல்கொடுக்க அனைவரும் அணி திரள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.AIADMK rule power – Growing CPM

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை அமலாக்கப்பட்டுள்ளது போல மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு காவல்துறையின் அத்துமீறல், அராஜகங்கள் அதிகரித்து வருகின்றன. பொதுக்கூட்டங்கள், தெருமுனைக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட ஜனநாயக இயக்கங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அனுமதி வாங்கி இயக்கங்கள் நடத்துவது பெரும்பாடாகி விடுகிறது.

தொடர்கதையாகும் கைதுகள் :

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு துவங்கி, பசுமை வழிச்சாலை திட்டம், கோவை குடிநீர் திட்டத்தை வெளிநாட்டு கம்பெனிக்கு வழங்கியது போன்றவை குறித்து பேட்டி கொடுத்தாலோ, துண்டுப்பிரசுரம் வெளியிட்டாலோ, போராட்டம் நடத்தினாலோ பல பிரிவுகளில் வழக்கு போடுவது, கைது செய்வது உள்ளிட்ட மோசமான நடவடிக்கைகளில் காவல்துறை ஈடுபடுகிறது.

தூத்துக்குடியில் சுமார் 20 ஆயிரம் பேருக்கு மேல் வழக்குப் பதிவு செய்து இரவோடு, இரவாக கைதுகள் தொடர்ந்து கொண்டுள்ளன. சேலம் – சென்னை பசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவது என்கிற பெயரில் அப்பாவி நில உடமையாளர்கள், ஆண்கள் – பெண்கள் மீது காவல்துறை மூர்க்கத்தனமாக தாக்குதல் தொடுப்பது, வழக்கு போட்டு கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது.

நிலம் கையகப்படுத்துகிற பிரச்சனையில் குறைந்தபட்ச சட்ட விதிகள் கூட பின்பற்றப்படவில்லை. சம்பந்தப்பட்ட நில உடமையாளர்களுக்கு முன்னறிவிப்பு கூட இல்லாமல் நிலங்களில் கல் பதிக்கும் வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நியாயம் கேட்கும் யாராக இருந்தாலும் அடித்து, கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து மிரட்டப்படுகின்றனர். செய்தி சேகரிக்கச் செல்லும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் இந்த தாக்குதலிலிருந்து தப்பவில்லை. இதுமட்டுமின்றி எடுத்ததற்கெல்லாம் பலரின் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்படுகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில் :

வெளியூர்காரர்கள் இம்மாவட்டத்திற்குள் உள்ள பசுமை வழிச்சாலை சம்பந்தப்பட்ட கிராம மக்களை சந்தித்து பேசுவது சட்டவிரோதம் எனவும், அவ்வாறு வருபவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதன் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் அறிவித்திருப்பது அதிமுக ஆட்சியில் எந்த அளவு அதிகார வெறி அதிகாரிகளுக்கு உச்சிக்கு ஏறியுள்ளது என்பது எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

கோவை குடிநீர் திட்ட ஒப்பந்த நகல் தங்களுக்கு அளிக்க வேண்டுமென கோவை மாநகராட்சி அலுவலகத்திற்கு மனு கொடுக்க சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சி. பத்மநாபன் அவர்களை ஆணையர் அவமானப்படுத்தியதுடன், அவர் மீது புகார் கொடுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே, அமைதியான முறையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய பி. டில்லிபாபு அவர்களை செங்கம் டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தி அநாகரீகமான முறையில் கைது செய்துள்ளார்.

இச்சம்பவங்கள் தமிழகத்தில் “இம் என்றால் சிறை வாசம், ஏன் என்றால் வன வாசம்” என்பது போன்ற காவல்துறை அராஜகம் தலைவிரித்தாடுகிறது என்பதையே காட்டுகிறது. கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகளை நடைமுறைப் படுத்துவதற்காக காவல்துறையை தனது கையாளாக பயன்படுத்தி எடப்பாடி பழனிச்சாமி அரசு மக்களின் ஜனநாயக உரிமைகளையும், விதிகளையும் காலில் போட்டு மிதித்து வருகிறது.

தமிழக அரசு மற்றும் காவல்துறையின் இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதுடன் அரசு தனது போக்கினை மாற்றிக் கொள்ள வேண்டுமென வற்புறுத்துகிறோம். அரசின் இப்போக்கினை முறியடித்திட அனைத்து அரசியல் கட்சிகளும், ஜனநாயக எண்ணம் கொண்டவர்களும் இணைந்து குரலெழுப்ப முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags:

You Might also Like