Type to search

சமூக மனசாட்சியை கிழித்து ரணமாக்கட்டும்! – அபிமன்யு படுகொலை!

India Top Story Tamil nadu

சமூக மனசாட்சியை கிழித்து ரணமாக்கட்டும்! – அபிமன்யு படுகொலை!

Share

DYFI-ன் பகுதி மாநாட்டில் கலந்து கொண்டு தனது சொந்த கிராமமான வட்டவட என்ற ஊரிலிருந்து எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரியை நோக்கி தனது படிப்பைத் தொடர, பயணத்தை மேற்கொண்ட போது அந்த இளம் குருத்து அறிந்திருக்கவில்லை இது தனது கடைசி பயணம் என்று…!tear social conscience! – Abhimanyu assassination!

ஆம், தனது சலனமற்ற உடல் தான் ஊர் திரும்பப் போகிறது என்று அவன் அறிந்திருக்கவேயில்லை…!

ஆனால் போராட்ட குணமுள்ள எல்லா இடதுசாரிகளையும் போல, கம்யூனிஸ்டுகளையும் போல போராட்டக்களத்தில் நிற்கும் போது, அநீதிகளுக்கு எதிராக போராடும்போது, தனது உயிருக்குக் கூட ஆபத்து நேரலாம் என்பதை உணர்ந்து தான் இருந்தார் அந்த இளம் தோழர்.

எனவேதான், பகத்சிங் தனது தந்தைக்கு கூறியதைப்போல….அபிமன்யுவும் அவரது தாயிடம் எப்போதும், “அநீதிக்கு எதிரான போராட்டத்தில் எனக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் நீங்கள் ஒருபோதும் அழக்கூடாது…அவ்வாறு நீங்கள் அழுதால் வேறு எந்த தாயும் தங்கள் பிள்ளைகளை இந்த இயக்கத்திற்கு அனுப்ப மாட்டார்கள்” என்று அடிக்கடி கூறுவதுண்டாம்…!

அவர் எப்பொழுதும் தனது சொந்த ஊருக்கு சென்று திரும்பும் போது பேருந்தில் எர்ணாகுளம் செல்வதேயில்லை. இடுக்கியிலிருந்து எர்ணாகுளம் செல்லும் காய்கறி வண்டிகளில் பயணம் செய்வது தான் வழக்கம், காரணம் வறுமை…!

தற்போது, தனது சகோதரியின் திருமணத்திற்காக பணம் திரட்டும் சுமையும் அந்தக் குடும்பத்திற்கு இருப்பதால் இன்னும் இன்னும் தனது செலவுகளை குறைத்து இயக்க வேலைகளையும் தனது தேவைகளையும் சமாளித்து வந்துள்ளார்..!

இந்திய மாணவர் சங்கத்தில் செயல்பட்டதற்காக சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு உடல் செயலிழந்து நரகவேதனையை அனுபவித்துக் கொண்டு, வாழும் தியாகியாக கடந்த 30 வருடங்களாக சக்கர நாற்காலியில் காலத்தைக்கழிக்கும் எழுத்தாளர் தோழர். சைமன் பிரிட்டோவிடம், அபிமன்யு மிக நெருக்கமாக பழகியுள்ளார்…!

இறுதி நிகழ்ச்சியில் தோழர். சைமன் பிரிட்டோ கூறியதாக ஏசியாநெட் செய்தியாளர் சுஜித் சந்திரன் தனது முகநூலில் பதிந்துள்ள செய்தி யாருக்கும் கண்ணீரை வரவழைக்கும் ஒன்றாகும்…!

மகாராஜாஸ் கல்லூரியின் மேஜை ஒன்றில் தான் தோழர். அபிமன்யுவின் உடலை அவரது சக தோழர்கள் படுக்க வைத்திருந்தார்கள், அவருக்கு அருகிலிருந்து “என் மகனே” நான் பெற்ற மகனே” என்று அரைகுறை மலையாளம் கலந்த தமிழில் தோட்டத்தொழிலாளியான அவரது தாயார் பூவை கதறுவதைத் தவிர வேறு எந்த சிறு சத்தமும் அங்கே கேட்கவில்லை, ஏதோ ஒரு தோழரின் தோளில் ஆதரவாக தலையை சாய்த்துக்கொண்டு அமைதியாக அழுதுகொண்டே தனது வேட்டியின் நுனியால் கண்ணீரைத் துடைக்கும் தந்தை மனோகரன், நெரிசலுக்கிடையில் சென்று அவரது உடலுக்கு மரியாதை செலுத்திவிட்டு வெளியேறும் போது, ஓரமாக சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் தோழர்.சைமன் பிரிட்டோவை பார்த்தேன்,
நடுங்கும் கரங்களில் தனது மகளை தன்னுடன் இறுக்கி அணைத்திருந்தார்…!

அபிமன்யுவின் உடலை அங்கிருந்து வெளியே கொண்டுசெல்லும் போது தோழர். சைமன் பிரிட்டோவின் அருகில் ஒரு நிமிடம் நிறுத்தினார்கள், அவர் தனது முறுக்கிய கரங்களை உயர்த்தி அபிமன்யுவிற்கு வீரவணக்கம் செலுத்துவார் என்று தான் நான் நினைத்தேன், ஆனால் அவர் அபிமன்யுவுக்கு மிகுந்த சிரமப்பட்டு நெற்றியில் முத்தமிட்டார்…!

செய்தியாளர்களிடம் தோழர். பிரிட்டோ,”இவ்வளவு நல்ல குணம் படைத்த இளைஞனை பார்க்கவே முடியாது. அவனிடம் ஒருபோதும் பணம் இருந்ததில்லை, ஊருக்குச் செல்லும் போது பணம் கொடுத்து உதவ முயன்றால் ‘வேண்டாம் தோழர்’ என்று மறுத்து விடுவான். சொந்த ஊருக்குப்போகாத வெள்ளிக்கிழமைகளில், எனது புதிய புத்தகத்தை படியெடுக்கும் வேலைகளில் எனக்கு உதவுவதற்காக என் வீட்டிற்கு வருவான்…!

எனது மனைவி ஸீனா, அவனுக்கு விருப்பமான உணவை சமைத்துக் கொடுப்பார், அவ்வாறு ஒவ்வொரு முறை உணவை அருந்தும் போதும் விடுதியில் தன்னுடன் தங்கியிருக்கும் யாருமே சாப்பிட்டிருக்க மாட்டார்கள் என்று கூறிக்கொண்டு தான் சாப்பிடுவான், அவன் ஒரு சாதுவான இளைஞனாக இருந்தான்…!

அவரது உடலை ஏற்றிசென்ற ஆம்புலன்ஸ் மகாரஜாஸ் கல்லூரி வாசலை விட்டு வெளியேறும்போது அருகில் நின்றுகொண்டிருந்த ஹாஸ்னா, “இன்றுதான் முதல் வருட மாணவர்களின் வகுப்புகள் துவங்கும் நாள், கடந்தவருடம் அவனது தந்தை இதேநாளில் அவனை இங்கே ஒப்படைத்துச் சென்றார். இந்த வருடம் முதல்நாள் அவனை திரும்பக் கொண்டு செல்கிறார்கள், என்றார்…!

தோழர், சைமன் சிறிது நேரத்திற்கு முன்பு தான் இதையும் சொன்னார், நான் அவனிடம் அடிக்கடி கூறுவேன். நீ அபிமன்யு, நீ சக்கர வியுகதிற்குள் நுழையத்தான் முடியுமே தவிர உன்னால் வெளியேற முடியாது, அங்கே நீ மாட்டிக்கொள்வாய், சண்டைகளில் ஏதும் நீ மாட்டிக்கொள்ளாதே, ஆனாலும் அது நடந்தே விட்டதே…!

அபிமன்யுவிற்கு வயது வெறும் 20…!

ஒரு ஏழைத் தமிழ் தோட்டத்தொழிலாளர் குடும்பத்தின் ஒட்டுமொத்த நம்பிக்கையாக இருந்தவன்…!

இரண்டாம் வருட வேதியல் இளங்கலை மாணவன்…!

படிப்பில் படு சுட்டி…!

அனைத்திற்கும் மேலாக கல்லூரி வளாகத்திற்குள் இந்திய மாணவர் சங்கத்தின் தீரமிக்க போராளி…!

இறுதியில் சொன்ன குற்றத்திற்காக மட்டுமே அவனுக்கு மதவாதிகள் மரணத்தை தண்டனையாகக் கொடுத்தார்கள்…!

கல்லூரிக்கு வெளியிலிருந்து கொலையாளிகளின் கூட்டம் மதத்தின் பெயரில் கல்லூரி வளாகத்திற்குள் வந்தது…!

ஒருவன் பின்னிலிருந்து இருகைகளையும் பிணைக்க இன்னொருவன் கத்தியால் நடுநெஞ்சில் குத்தினான்…!

சம்பவ இடத்திலேயே வீரமரணம்…!

அபிமன்யு சுவரெழுத்து வேலையில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட தகராறில் தான் கொல்லப்பட்டார்…!

அவர் சுவரில் எழுதியிருந்த “மதவாதம் தகரட்டும்” என்ற முழக்கம், இந்த சமூகத்தின் மனசாட்சியை குத்திக் கிழித்து ரணமாக்கட்டும்…!

அபிமன்யு நம்முடன் என்றன்றும் வாழ்வார்…அவரது முழக்கத்தின் மூலமாக…!

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags: