Type to search

“நீ மாறிடாதே இப்படியே இரு” – `திருநங்கை’ ராஜகுமாரி!

Tamil nadu

“நீ மாறிடாதே இப்படியே இரு” – `திருநங்கை’ ராஜகுமாரி!

Share

தன்னுடைய வலிகளை தன் கலை வழியே ஆற்றுப்படுத்திக்கொள்கிறார், பரதநாட்டியக் கலைஞரான, ராஜகுமாரி. சென்னைத் திருவொற்றியூரில் இவரைத் தெரியாதவரே இல்லை எனலாம். 15 வருடங்களுக்கும் மேலாக நாட்டியம் கற்றுத்தருபவரிடம் பேசினேன்.Bharatnatyam artist “Transgender” Rajakumari!

“என் சொந்த ஊர், ஈரோடு மாவட்டத்தின் தாராபுரம். கஷ்டமான குடும்பம். ஒரு அண்ணன், அக்கா. அப்பா கூலி வேலை பார்த்துதான் எங்களைப் படிக்கவெச்சார். எனக்கு விவரம் தெரிஞ்ச வயசிலிருந்து ஆண் மாதிரி நடந்துகிட்டதில்லே. என்னைப் பெண்ணாகத்தான் நினைச்சேன். இதை யாரும் புரிஞ்சுக்கலை. எல்லோரும் கேலி பேசுவாங்க. சில பாலியல் சீண்டலுக்கும் ஆளானேன். என்ன பண்றதுன்னே தெரியாம ஸ்கூலுக்குப் போக மாட்டேன்னு சொல்லிட்டேன்.

பத்தாம் வகுப்பு பரீட்சை மட்டும் எழுதப் போனேன். மனசளவுல ரொம்ப நொறுங்கிப் போனதால், ஃபெயிலாகிட்டேன். படிப்பை நிறுத்திட்டு வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். பரதநாட்டியம், டைப்ரைட்டிங் கத்துக்கிட்டேன். ஒரு கட்டத்துக்கு மேலே நான் திருநங்கையாக மாறப்போறேன்னு அம்மாகிட்ட தைரியாமாகச் சொன்னேன்.

வீட்ல யாரும் என்னை ஒதுக்கலை. ஆனால், `நீ இப்படியே இரு. பெண்ணாக மாறிடாதே’னு மட்டும் சொல்லிட்டே இருந்தாங்க. நான் என் வாழ்க்கையை இப்படித்தான் வாழணும்னு விரும்பினேன். அதனால், வீட்டைவிட்டு வெளியேறிட்டேன். கொஞ்ச நாள் மில் வேலைக்குப் போனேன். அங்கேயும் நிறைய தொந்தரவுகள். எல்லாத்தையும் பொறுத்துட்டு வேலை பார்த்தேன்.

2006-ம் வருஷம் சென்னைக்கு வந்தேன். இங்கும் நிறைய கஷ்டம். எல்லாத்தையும் தாங்கிகிட்டு 2010-ம் வருஷம் ஆபரேஷன் பண்ணிகிட்டேன்.

பல கம்பெனிகளில் வேலை பார்த்த அனுபவம் இருக்கு. அப்படியொரு இடத்துல வேலை பார்க்கும்போது அங்கே உள்ள ஒருத்தர் மூலமா டேட்டா என்ட்ரி வேலை கிடைச்சது. அந்த வேலையில் இருக்கும்போதே, தமிழ் இசைக் கல்லூரியில் பரதத்துக்கான டிப்ளோமா கிளாஸ் சேர்ந்து படிச்சேன். படிப்பு, நடனம் இது இரண்டு மட்டும்தான் என் இலக்கா இருந்துச்சு.

என்னோடு அலுவலகத்தில் வேலை பார்த்தவருடன் காதல் ஏற்பட்டுச்சு. அவருக்கு நான், எனக்கு அவர் என லிவிங் டு கெதரா 10 வருஷமா வாழ்ந்தோம். அவர் வீட்டுல திருமணம் செய்துக்க என்று கட்டாயப்படுத்துறதாச் சொல்லிட்டு, 2016-ல் என்னை விட்டுட்டு போய்ட்டார்.

அவர் எங்கே இருந்தாலும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறேன். அதனால், அவர் பெயரைக்கூட சொல்ல மாட்டேன். அவர் என்னைவிட்டுப் போனாலும், அவர் நினைப்பில்தான் என் நாள்களைக் கழிக்கிறேன்” எனக் காதல் நிரம்பிய குரலுடன் தொடர்கிறார் ராஜகுமாரி.

“அவருக்கு என் மேல அவ்வளவு பிரியம். அவர் கொடுத்த தைரியம்தான் என்னை இந்த அளவுக்கு முன்னேற வெச்சது. அவரோடு வாழ்ந்த நாள்கள் பொக்கிஷமானது. அவர் பிரிவைத் தாங்கமுடியாம தவிச்சேன். எனக்கு மருந்தா இருந்தது என் கலைதான்.

Bharatnatyam artist "Transgender" Rajakumari!

அவரோடு இருக்கும்போது நான் கத்துக்கிட்ட கலை. அவர் என்கிட்ட நேசித்த கலை. அந்தக் கலைதான் இப்போ வாழ்க்கைத் துணையா இருக்கு. பரதநாட்டிய கிளாஸ் ஆரம்பிச்சேன். நிறைய குழந்தைங்களுக்குக் கற்றுக்கொடுத்தேன். தாயாக முடியாத நான், இந்தக் கலை மூலமா நிறைய குழந்தைகளுக்குத் தாயானேன். பார்ட் டைமா இலவச சட்ட உதவி மையத்தில் தன்னார்வல சட்டப்பணி உதவியாளராவும் இருக்கேன்.

இப்போ 42 வயசாகுது. இப்பவும் அவரை மறக்கவோ வெறுக்கவோ முடியலை.

நீ இல்லைனாலும் உன் காதல் போதும். இந்த உசுரு வாழவும் சாகவும்”’ என்கிறார், ராஜகுமாரி.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags: