Type to search

‘நாங்க ஒரே சாதி’ – குமரெட்டியாபுரம், தூத்துக்குடி!

India Top Story Tamil nadu

‘நாங்க ஒரே சாதி’ – குமரெட்டியாபுரம், தூத்துக்குடி!

Share

தூத்துக்குடி நகரத்திலிருந்து பேருந்து வசதி குறைந்த வறண்ட பூமியான குமரெட்டியாபுரம். public caste – Kumaretiyapuram, Tuticorin

அந்த கிராமத்திற்கு போகும் வழியில் ஆலையின் பின்பக்கம் நூறு மீட்டருக்கு ஒன்றென வரிசையாக ஸ்டெர்லைட்டின் இரும்புக் கதவுகள் பூட்டப்பட்டு இருந்தது. ஒவ்வொரு கேட்டின் முன்பும் ஆலையின் வாட்ச்மேன் போல காக்கி உடையில் காவலர்கள் உட்கார்ந்துகொண்டு இருந்தார்கள். ஆலையை ஒட்டியிருந்த சாக்கடைக் கால்வாயில் மஞ்சள் கலந்த ஆரஞ்சு வண்ணத்தில் சாக்கடை போய்க்கொண்டு இருந்தது. அந்த கழிவுநீர் ஸ்டெர்லைட் ஆலைக்குள்ளிருந்து வெளிவந்துக்கொண்டு இருந்தது. அதற்கு முன்தினம் இரவு தான் அரசுத் தரப்பில் ஆலையை மூடுவதாக அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது.

துப்பாக்கிச் சூடு நடந்த மே 22ஆம் தேதியிலிருந்து அதன் பின் ஏழு நாட்களாக எந்தப் பேருந்தும் வராத குமரெட்டியாபுரத்தில் நன்றாய் விரிந்திருந்த வேப்பமரத்தின் கீழ் பிளக்ஸ் விரித்து பத்து பெண்கள் உட்கார்ந்துகொண்டு இருந்தனர். அவர்களுக்கு முன்பு ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் அகர்வால் சோளக்கொல்லை பொம்மையாக பிளாஸ்டிக் சேரில் உட்கார வைத்துள்ளனர். அவருக்கு பின்னே “தூத்துக்குடி மக்களின் உயிரைக் கொல்லும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய” பிளக்ஸ் இரு பக்கம் மூங்கில் பிடித்து நின்று கொண்டு இருந்தது. நூறு நாட்களாக மழையிலும் வெயிலிலும் உட்கார்ந்திருந்த கோடீஸ்வரன் அகர்வால் உடை வெளுத்துப்போய் தொங்கிக்கொண்டு இருக்கிறார். மண்ணை மலடாக்கும் அவனை அவர்களால் இப்படித்தான் தண்டிக்க முடிந்தது.

“நம்ம ஊருக்கு பெரிய ஆலை வருது” என்று நினைத்த மக்களுக்கு அது ஆபத்து என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னவே சொன்னது புரிய பல ஆண்டுகள் ஆனது. மேலும் அந்தப் பகுதி மக்களோடு நெருக்கம் பாராட்ட வேதாந்தா குழுமம் ஒவ்வொரு வீட்டுக்கும் கழிப்பிடம் கட்டிகொடுத்தது. அவர்களின் துர்க்கையம்மன் கோவில் கட்டுமானத்தை விஸ்தரிப்பு செய்தது. அரசின் பாதி பங்களிப்போடும் நிறுவனத்தின் பாதி பங்களிப்போடும் சமுதாயக் கூடம் அமைத்தது. இப்படி பல்வேறு வேலைகளை நிறுவனம் செய்து இருந்தது. அவர்களால் பங்களிப்பு செய்யப்பட்ட எல்லா சுவரிலும் கொட்டை எழுத்தில் நிறுவனத்தின் பெயர் எழுதப்பட்டு இருந்தது. அவை எல்லாம் இப்போது மஞ்சள் நிற மையால் அழிக்கப்பட்டு உள்ளது. அந்த ஊருக்காக வந்த ஆலையின் மருந்து வண்டி இப்போது அனுமதிக்கப்படுவது இல்லை. ஒருபுறம் நன்மை செய்வதாக பாசாங்கு செய்துவிட்டு மறுபுறம் எமனாக அவதாரம் எடுப்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள். ஏழாவது படிக்கும் சிறுவன் சொல்கிறான் அகர்வாலைப் பற்றியும் வேதாந்தாவின் சூழ்ச்சி பற்றியும். அவர்கள் அரசியல் படிக்க ஆரம்பித்து விட்டதால் அரசு அவர்களை எதிர்கொள்ள அஞ்சுகிறது.

அப்பகுதி மக்கள் குடிக்கும் தண்ணீரீல், அதில் பல நாட்களாக கிடக்கும் துருப்பிடித்த இரும்புத் துண்டின் வாசம் அடிக்கிறது. அந்த தண்ணீரை மீட்டெடுக்க அவர்கள் நடத்திய போராட்டம் நீண்டது. அவர்களின் நீண்ட போராட்டத்தின் நீட்சிதான் நூறு நாட்கள் நடந்த தொடர் போராட்டம். தினமும் காட்டுக்கு வேலைக்கு போவது போல காலை வேப்பமரத்துக்கு அடியில் வந்து உட்காரும் பெண்கள் மதியம் அங்கேயே “கூட்டு சோறு” செய்து சாப்பிட்டு இரவு வரை தர்ணா செய்து, மாலை ஒட்டுமொத்த ஊரும் சேர்ந்து முழக்கமிட்டு நடத்திய மண்ணிற்க்கான தொடர் போராட்டம். அந்த தியாகத்தைத் தான் சூப்பர் ஸ்டார்கள் “சமூக விரோதிகளின் ஊடுருவல்” என்கிறார்கள்.

இதனையடுத்து அந்த கிராமத்தில் மூன்று சாதிகள் உள்ளன. இப்போது ஒரே சாதியாக நின்று போராடிக்கொண்டு இருக்கிறார்கள். கைகள் கோர்த்துப் போராடினால் மட்டுமே எல்லாவற்றிலும் விடிவு பிறக்கும் என அப்பகுதி மக்கள் கூறினார்கள்.

More Tamil News

Tamil News Group websites :

Tags: